ஞாயிறு, 15 அக்டோபர், 2017

விதைக்KALAM 112

அய்யா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று விதைக்கலாமின் 112 ஆவது வார நிகழ்வில்  நரிமேடு, புதுகையில் 5 கன்றுகள் நடப்பட்டது...

வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஜெவிச்சுட்டோம்

எங்கள் பள்ளி மாணவிகள் செல்வி. அனுஷா மற்றும் செல்வி. வனிதா இருவரும் முசிறியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார்கள்...

இதில் அனுஷா கலந்துகொண்ட 1500மீ போட்டியில் மாநில அளவில் முதலிடத்திலும் 3000மீ போட்டியில் 3 ஆவது இடமும் பெற்று தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்...

செல்வி . வனிதா 3000மீ போட்டியில் பங்குபெற்று 5 ஆவது இடம்பிடித்தார்...

பள்ளிக்கும் நம் புதுகைக்கும் பெருமை சேர்த்த இரு மாணவிகளையும் பாராட்டி பெருமை அடைவதில் மகிழ்கிறோம்...

இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களை பாராட்டுகிறோம்...

#மகிழ்ச்சி

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சுட்டி

நடைபாதையின் 
விளிம்பில் 
நிழலொன்று 
தள்ளாடிக்கொண்டிருக்கிறது 
உட்கார்ந்து 
எழுந்து 
திரும்பி 
சப்புகொட்டியது 
பொக்கை வாயால் 
குச்சிமிட்டாயை 
மறுபடியும் 
தவழ்ந்து 
எழுந்து 
தள்ளாடிக்கொண்டிருக்கிறது


                                                                                           நட்புடன் ஸ்ரீ 

திங்கள், 24 ஏப்ரல், 2017

பொக்கிஷம்

     குழந்தைகளை புரிந்துகொள்வதென்பது ஒரு கலை.  அவர்களோடு இணைந்து பயணித்தால் மட்டுமே அதில் வெற்றிபெற முடியும். இங்கு குழந்தை தானாய் வெற்றி பெறவேண்டும் என்பதைவிட நாம் முன்கூட்டியே  வெற்றிக்கான இலக்கை அவர்களுக்கு குறிப்பால் உணர்த்திக்கொண்டே இருக்கிறோம் என்பதை எத்தனை பெற்றோர்கள் உணர்திருக்கிறார்கள் என்பது வினாக்குறியே ? அப்படியே உணர்ந்தார்கள் என்றாலும் அதிலிருந்து எத்தனை பெற்றோர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதிலும் ஒரு நூறு வினாக்குறியை இட்டுக்கொள்ளுங்கள் ??? 


    உதாரணமாக என்னிடம் பயிலும்  ஆறாம் வகுப்பு மாணவனின் அம்மா என்னை சந்திக்க வந்தார்கள் . என்ன என்று வினவுவதற்கு முன்னமே சார் என் பையன் வீட்டுக்கு வந்ததுமே பைய தூக்கி போட்டுட்டு விளையாட போய்விடுகிறான் சார் என்றார்கள். இப்படியே விளையாடினால் அவன் எப்படி சார் முன்னுக்கு வர முடியும். எனக்கு அவனை பற்றிய நிறைய கனவுகள் இருக்கிறது சார் . அவன் நன்றாக படித்தால் என்ன வேண்டுமானாலும் படிக்க வைப்போம் சார் என்றார்கள்... நானோ அம்மா பையன் விளையாடுவது உடல் நலத்திற்கும் அவன் மனத்தால் தன்னை அடுத்து ஒருமுகப்படுத்துவதர்க்கும் விளையாட்டு தேவைதான் என்றேன். இல்லை சார் அவன் ஐந்து மணிக்கு போனால் எட்டு மணிக்குதான் வருகிறான் என்றார்கள். சரி உடனே புரிய வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்  மாணவனிடம் விசாரித்ததில் அவன் அப்படிதான் இருக்கிறான் என்பதை தெரிந்து உறுதிபடுத்தி அவனுக்கு அறிவுரை கூறி இனி நீ எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை படிக்கிறாய் என்பதை டைரியில் எழுதி தினசரி  அம்மாவிடம் கையொப்பம் பெற்றுவா என்று சொல்லி அனுப்பி வைத்தேன்... 

இதில் பிரச்சனையை ஒரு பக்கம் தீர்த்து வைத்தேன் என்பதைவிட அவனுடைய கனவுகள் என்னவாய் இருக்குமோ ? அவன் கனவுகள் பொய்த்துபோய்விடுமோ என்ற பயமே அதிகரித்தது ?

குழந்தைக்கு நல்லது செய்கிறேன் பெயரில் கனவுகள் மறகடிக்கப்பட்டும், சில நேரங்களில் தியாக பொருளாகவும் மாறிபோகிறது. மாறாக பல்வேறு துறைகளை பற்றி அவனுக்கு சொல்லியும் குடும்பத்தின் பொருளாதாரத்தை சொல்லியும் அவன் வளர்க்கப்படும்போது குழந்தை தானாகவே தன் மனதிற்குள் கணக்கிட்டு தன்னுடைய துறையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது என் எண்ணம் . 

பெற்றோர்களே 

புரிந்துகொள்ளுங்கள் . அவர்கள் உங்கள் கனவுதான் என்றாலும் அவர்களுக்கென்றும்  கனவுகள் இருக்கிறது.
           
அவர்கள் உங்களுக்காக நீங்களே படைத்துக்கொண்ட பரிசு. அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றி அதை பரிசளியுங்கள்.

அவர்களுக்காக நீங்கள் பெரிதாய் வேறென்ன செய்ய வேண்டும் 


                                                                                                       நட்புடன் ஸ்ரீ 
                                                                                   

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

எறவானம் - மேஜிக்

இதோ வெகுநாள் கழித்து வலையுலக நட்புக்களை சந்திப்பதில் மகிழ்வு .

இனி முடிந்தவரை தினமும் ஒரு பதிவையேனும் உங்களிடம் பகிர்ந்து உங்களோடு சேர்ந்து பயணிக்க முயல்கிறேன் .

இன்று புத்தக தினம் என்பதால் உங்களிடம் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ய விழைகிறேன்.

இன்று வீதி கலை  இலக்கிய அமைப்பில் எறவானம் என்ற கவிதை நூலை படித்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.

கவிதை நூலை பற்றி சொல்லவேண்டுமெனில் , நிச்சயம் இந்த நூலை படித்து கீழே வைக்கும்போது நீங்கள் ஒரு பெரிய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவீர்கள்  என்பது என்  எண்ணம்.

புத்தகம் சமூகத்தையும்,நிகழ்கால அரசியலையும் , சாதிய  வர்க்கத்தையும் வறுத்து எடுத்து(வை)ரைக்கிறது. இந்நூலை கவிஞர் வினையன்  அவர்கள் எழுதியிருக்கிறார் .

சொற்களில் புகுந்து விளையாண்டிருக்கிறார் கவிஞர். மனதில் ஒரு சொல் எப்படி எழுமோ அதை அப்படியே வார்த்து கவிதையாய் கொட்டியிருக்கிறார். முடிந்தால் படித்துப்பாருங்கள்.

ஒரே ஒரு கவிதையின் சாரத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்


வயோதிகன்  ஒருவன் இறந்துவிட்டான். சுடுகாட்டில் அவன் பிள்ளை சொந்த பந்தங்கள் எல்லாம்  கொள்ளிவைத்துவிட்டு போய்விடுகிறார்கள் . இப்பொழுது சுடுகாட்டில் வெட்டியானும் எறியும் பிணமும் மட்டும்தான். வெட்டியான் அவரிடம் என்னை சாதி சொல்லி  கேலிசெய்தாயே என்று மணிக்கட்டில் ஒரு அடி , இதனை பேருக்கு வெட்டியான் நீ உனக்கு யாருடா கொள்ளிவைப்பானு கேட்டியேன்னு முழக்காலு மூட்டுல ரெண்டு அடி பாத்தியாடா செத்தா நீயும் நானும் சாம்பல் தாண்டானு  சொல்கிறபடி ஒரு கவிதை .... ஆனால் கவிதையாய் படிக்கும்போது செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது .
 எறவானம் - மேஜிக் 

நண்பர்களுக்கு இனிய புத்தக தின வாழ்த்துக்கள் .


                                                                                                            --- ஸ்ரீ 

செவ்வாய், 5 ஜூலை, 2016

டிஸ்லெக்ஸ்சியா - விரட்டியடிப்போம்

 இன்றைய பதிவில் நான் எடுத்துக்கொண்ட பகுதி ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் சம்மந்தமானது. இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஆசிரிய பெருமக்களிடம் இது பற்றி கலந்துறையாடியும் , நீங்கள் ஆசிரியர்களாகவோ அல்ல இந்த பகுதியை பற்றிய ஆராய்ச்சியாளராகவோ இருந்தால் மேற்கொண்டு அறிவுரையும் ஆலோசனைகளையும் பதிவிடவும் ...

ஆசிரியர் எவ்வாறு உதவ வேண்டும் ?

    ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல வழிகளில் உதவ முடியும். நம்மிடம் பயிலும் மாணவர்களின் பாடம் தொடர்பான அவர்களது பலத்தையும் , பலவீனத்தையும் , தேவைகளையும் காண்பதன் மூலம் அவர்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்டார்களா என்பதை கண்டறிதல் வேண்டும். 

      இதோ உதாரணத்திற்கு என்னுடைய வகுப்பில் ஒரு மாணவனை கண்டறிந்த சான்றுப் படம் ... 


(சான்று)


   பொதுவாக நம்முடைய கண்ணோட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் டிஸ்லெக்ஸ்சியா குறைபாடுடையவர்களாக தோன்றுவார்கள். அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு ! மெதுவாகக் கற்கும் மாணவர்களையும் நாம் குறைபாடுடையவர்களாக கருதிவிடுவதே அதற்கு காரணம். 


உண்மையாகவே குறைபாடுடைய மாணவர்களை எவ்வாறு கண்டறிவது ?


 அவர்களது தேவைகளை அறிந்து அதற்குத் தகுந்த பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சாதாரண மாணவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியிலிருந்து வேறுபட்டு புதிதான அவர்களுக்கென்று பாட திட்டத்தை உருவாக்க வேண்டும்.


அவர்களுக்கு மனனப் பயிற்சியளித்து பின்னர் பொருள்களுக்கான காரணங்களையும் கருத்துருக்களையும் விளக்க வேண்டும். அவர்களது இயக்க குறைபாடுகள் , சிந்திக்கும் திறன் இதன்மூலமே வளர்ச்சியடையும். 


(உங்களுடைய  மைன்ட் வாய்ஸ்களை கேட்க முடிகிறது... நீ எழுதுவது எங்களுக்கும் தெரியும் அதற்கான நேரம்தான் எங்களிடம் இல்லை என்றுதானே கேட்க வருகிறீர்கள் ?)


   ஒரு நிமிடம் சிந்தியுங்கள் உங்கள் குழந்தைகள் இத்தகைய பாதிப்பில் இருந்தால் என்ன செய்வீர்கள் ? உண்மையாகவே டிச்லெக்ஸ்சியா குறைபாடுடைய குழந்தைக்குத் தேவை அவர்களை அடிக்கடி உற்சாகமூட்டுவதும் , அவர்களுடன் விளையாடுவதும் , கதைசொல்வதும், அவர்கள்மீது நீங்கள் அக்கறையுடையவர்கள் என்று அவர்களை உணரவைப்பதுமே இந்த சவாலில் நீங்கள் வெற்றிபெறும்  வழியாகும். எத்தகைய வழிகளில் அவர்கள் குறைபாடுடையவர்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டால் அவர்களை சரி செய்வது மிகவும் எளிது.


ஆசிரியர்கள்  எப்படியெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ?


௧. அவர்களுடைய உணர்வுகளை கவனித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்தல் வேண்டும். உதாரணமாக அவர்களுடைய கோபம் , அழுகை , வெறுப்புணர்ச்சிகளை கண்டறிதல். இத்தகைய குறைபாடுடைய மாணவர்களிடம் மொழியறிவு குறைவாக இருப்பதால் தனக்கு என்ன பிரச்சனை என்பதைக்கூட சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அவர்களை கண்டறிந்து சரி செய்தல் வேண்டும்.


௨. அவர்கள் மதிப்பெண்களைவிட மதிப்பினையே உயர்வாக கருதுவதாக கூறுகிறது ஆய்வு. நீங்கள் அவர்களுக்கு வழங்கும் குறைவான மதிப்பெண்களைவிட அவர்களை "முட்டாள்கள் ", "திருந்தாதவர்கள் ", "சோம்பேறிகள் ", உன்னால் எதுவும் செய்ய முடியாது ", " நீ எதற்கும் லாயக்கு இல்லை " என்ற வார்த்தைகள் அவர்களை ரணப்படுத்துவதோடு அவர்களை தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாக மாற்றி தோல்வியாளர்களாக்கிவிடுகிறது.


௩. இந்த மூன்றாவது செய்திதான் முக்கியமாக ஆசிரியர்கள் மனதில் உள்வாங்கவேண்டிய செய்தி. டிஸ்லெக்ஸ்சியா குறைபாடுடைய மாணவன் தனக்கென்று ஒரு வெற்றிபெறக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்ய மாட்டான். ஆசிரியர்தான் அவர்களுக்கான துரிதமாக வெற்றிபெறக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்துகொடுத்தல் வேண்டும்...


என்ன நண்பர்களே இன்றைய செய்தி பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன் !!! அடுத்த பதிவில் மாணவர்களுக்கு என்ன பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றலாம் என்பதை தருகிறேன் !!!!


நன்றியுடன் ஸ்ரீ  


வெள்ளி, 1 ஜூலை, 2016

டிச்லெக்ஸ்சியா - கற்றல் குறைபாடு

“If they don’t learn the way we teach, can we
teach them the way they learn?”
Dr Harry T. Chasty


    என்னவொரு அருமையான வாசகம்!!! நாம் கற்றுக்கொடுக்கும் வழியில் அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நாம் ஏன் அவர்கள் வழியில் சென்று கற்றுக்கொடுக்கக் கூடாது என்று வினா எழுப்புகிறார் ஹாரி சாஸ்டி..


    இந்தியாவில் மொத்தமாக 10-15 %  பள்ளி செல்லும் மாணவர்கள் கற்றலில் குறைபாடு உடைய மாணவர்கள் என்று கூறுகிறது MDA ஆய்வு. அதாவது ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தால் அதில் சராசரியாக ஆறு மாணவர்கள் கற்றல் குறைபாடு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ஆறு மாணவர்களும் டிஸ்லெக்ஸ்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இதில் மெதுவாக கற்கும் மாணவர்களும் அடங்குவர். 


 ஆரம்பத்திலேயே டிஸ்லெக்ஸ்சியா குறைபாடு உடையவராக கண்டறியப்பட்டால் அவர்களை வெகு விரைவிலேயே சரி செய்துவிட முடியும்.

  டிஸ்லெக்ஸ்சியாவா குறைபாடு உள்ள மாணவர்கள் கீழ்கண்ட வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பர்:

௧. கவனக்குறைவு ஏற்படுதல் .

௨. வாசித்தலில் குறைபாடு 

௩. உடல் இயக்க அசைவுகளில் குறைபாடு 

௪. மொழியாற்றளில் குறைபாடு 

௫. பேசுவதில் பிரச்சனை

௬. சமூகம் சார்ந்த செயல்களில் குறைபாடு 

௭.கணிதத் திறன் இல்லாமை 

௮. தாய்மொழி மற்றும் இரண்டாம் மாற்று மொழிகளை கற்றுக்கொள்வதில் சிரமம் 

௯. இதற்கு அப்பாற்பட்டு நினைவாற்றல் , ஒத்துழைக்காமல் இருப்பது போன்ற மன நலம் சார்ந்த செயல்களில் குறைபாடு உடையவர்கள்.


   பெரும்பாலாக டிஸ்லெக்ஸ்க் குழந்தைகள் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களில் குறைபாடு உடையவர்களாகவும், மேலும் மேற்குறிப்பிட்ட அனைத்துமோ அல்ல அதில் சிலவோ உள்ளவர்கள் இந்த குறைபாடு உடையவர்களாக கண்டறியப்படுகின்றனர்.

        சாஸ்டி சொல்வதைப்போல் நம்முடைய வழியில் அவர்களால் கற்றுக்கொள்ள முடியாது அவர்கள் வழியில் நாம் கற்றுக்கொடுத்தால் இருவருக்குமே வெற்றி நிச்சயம்!!!

இன்னும் விரிவாக நாளை !!!

நன்றியுடன் ஸ்ரீ ...

விதைக்KALAM 112

அய்யா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று விதைக்கலாமின் 112 ஆவது வார நிகழ்வில்  நரிமேடு, புதுகையில் 5 கன்றுகள் நடப்பட்டது...